இறால் பண்ணை தொழிலாளி அடித்துக் கொலை : 2 வடமாநில தொழிலாளர்கள் கைது..!

இறால் பண்ணை தொழிலாளி அடித்துக் கொலை : 2 வடமாநில தொழிலாளர்கள் கைது..!
X

 இறால் பண்ணை தொழிலாளி, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சடலத்தை எடுத்து செல்ல விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது.

பொன்னேரி அருகே பண பிரச்சனையில் இறால் பண்ணை தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழவேற்காடு அருகே காணாமல் போன இறால் பண்ணை தொழிலாளி அடித்துக் கொலை. பணப் பிரச்சினையில் கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள் இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த தாங்கல் பெரும்புலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் அதே கிராமத்தில் அமைந்துள்ள இறால் பண்ணையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார்.

இறால் பண்ணையில் உள்ள ஊழியர்களுக்கு சமையல் செய்து கொடுப்பதும், இரவு காவலாளியாகவும், மேற்பார்வைப் பணிகளையும் சிவராஜ் கவனித்து வந்துள்ளார். சனிக்கிழமை இரவு வழக்கம்போல இறால் பண்ணைக்கு சென்ற சிவராஜ் மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனை அடுத்து அவரது மனைவி இறால் பண்ணைக்கு சென்று விசாரித்த போது அங்கிருந்த வட மாநில தொழிலாளர்கள், நள்ளிரவே சிவராஜ் வெளியே சென்று விட்டதாகவும் அதற்கு பின்னர் அவர் மீண்டும் இறால் பண்ணைக்கு வரவில்லை எனக் கூறியுள்ளனர்.

ஆனால் இறால் பண்ணையில் சிவராஜின் காலணியும், செல்போனும் கிடந்ததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இறால் பண்ணையிலும் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளிலும் காவல்துறையினர் தேடினர். சிவராஜ் கிடைக்காததைத் தொடர்ந்து இறால் பண்ணையில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் சிவராஜுக்கும் தங்களுக்கும் இடையே பண பிரச்சனை இருந்ததாகவும் நள்ளிரவில் வாக்குவாதம் முற்றியதால் அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து சிவராஜை அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் அருகில் உள்ள புதரில் கொண்டு சென்று அவரது உடலை மறைத்து வைத்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிவராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி காவல் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் வட மாநில தொழிலாளர்கள் இருவரை கைது செய்துள்ளதாக கூறினர்.

இதனையடுத்து உடற்கூறு ஆய்விற்காக சிவராஜ் சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் காவல்துறையினர் வட மாநில தொழிலாளர்கள் இருவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story