சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் உடன் பொதுமக்கள் வாக்குவாதம்..!

சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் உடன் பொதுமக்கள் வாக்குவாதம்..!
X
பொன்னேரி சார் பதிவாளர் பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

பொன்னேரி சார் பதிவாளர் பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதம். தனிநபர் புகாரால் பத்திரப்பதிவு நிறுத்தம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் 1000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வீடு, கடைகள், விளைநிலங்கள், வீட்டு மனைகள் உள்ளன. இந்த கிராம நிலங்களை பத்திரப்பதிவு செய்ய பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றால் சார் பதிவாளர் பதிவு செய்ய மறுப்பதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தனிநபர் ஒருவர் குறிப்பிட்ட கிராம நிலங்களை கோவிலுக்கு சொந்தமானது என புகார் அளித்துள்ளதால் சார் பதிவாளர் பதிவு செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. ஆட்சேபனைக்கு உரிய நிலங்கள் என்றால் அது தொடர்பாக அறிவிப்பு பலகையில் முறையாக சர்வே எண்ணுடன் ஏன் முறையாக அறிவிப்பு வெளியிடவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருமணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்கு பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், மேலும் வங்கிகளில் கடன் பெற நிலத்தினை அடமானம் செய்ய முடியவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!