புதிதாக போடப்பட்ட தார் சாலை ஒரே நாளில் சேதமான அவலம்
போடப்பட்ட ஒரே நாளில் சேதமடைந்த தார் சாலை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் கடந்த 3ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளன. ஒரு சில வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்று சாலை அமைக்கப்பட்டு வருகின்றன.
பொன்னேரியில் இருந்து ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி செல்லும் சாலையில் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணிகளால் கடந்த ஓராண்டாக இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
கடந்த ஓராண்டாக மந்த கதியில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்குமாறு சுமார் 30.க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் விரைந்து சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொன்னேரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆலாடு, மனோபுரம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து பாதாள சாக்கடை முடிவுற்று கடந்த சில நாட்களுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. புதியதாக போடப்பட்ட தார் சாலை ஒரே நாளில் சேதமடைந்து ஆங்காங்கே உள்வாங்கியுள்ளது.
மேலும் பல இடங்களில் தார் சாலையில் விரிசல் ஏற்பட்டும் சாலை சேதமடைந்தும் உள்ளது. ஆங்காங்கே சுமார் ஒரு அடி தார் சாலை உள்வாங்கியுள்ளது. இதனால் இந்த சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சாலை தரமானதாக அமைக்காமல் பேப்பர் சாலையாக போடப்பட்டுள்ளதாகவும், இந்த சாலை அமைத்தும் பயனற்றதாக அமைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஓராண்டாக சாலை சீரமைக்கப்படாமல் இருந்ததால் கர்ப்பிணிகள், நோயாளிகள் என பெரும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது போடப்பட்டுள்ள சாலையும் ஒரே நாளில் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே ஓராண்டாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் சொந்த வாகனங்களில் சென்று வந்த நிலையில், தற்போது போடப்பட்ட சாலையும் சேதமடைந்துள்ளதால் பேருந்து சேவை எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் அவதியுற்று வருவதால் தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போடப்பட்ட ஒரே நாளில் சேதமடைந்த சாலையை மீண்டும் சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu