விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த பள்ளியில் தேசிய தூய்மைபணியாளர் ஆணையம் விசாரணை
மீஞ்சூர் அருகே விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த தனியார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர்
இந்தியாவிலேயே விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. தூய்மை பணியாளர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றார் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் கடந்த 1ஆம் தேதி மே தினத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மை பணியாளர்கள் கோவிந்தன், சுப்புராயலு ஆகிய இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல்துறையினர் பள்ளியின் தாளாளர் சிமியோன் விக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மறுவாழ்வு சட்டத்தின்படி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 3நாட்களுக்குள் தலா 15லட்ச ரூபாய் வழங்க மறுத்ததால் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பள்ளியை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொழிலாளர்கள் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர்தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தூய்மை பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பது அதிகம். கல்வியில் முன்னேறிய மாநிலம் என சொல்லும் தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பது வேதனை அளிக்கிறது.
ஆணையம் சார்பில் முறையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் தனியார் வேலை செய்பவர்களின் இறப்பு அதிகம் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தகுந்த உபகரணங்கள் உள்ளன எனவும், குறைந்த விலையில் கழிவு நீரை அகற்ற தனியாரை நாடுவதால் உயிரிழப்பு அதிகரிப்பதாக கூறினார்.
தூய்மை பணியாளருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அதேபோல தூய்மை பணியாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கழிவுநீர் தொட்டியில் இறங்க மாட்டேன் என்று உறுதி ஏற்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொண்டால் கழிவுநீர் அகற்றுவதற்கு உரிய வழிகாட்டலும், உபகரணங்களும் வழங்கப்படும்.
கழிவுநீர் தொடர்பாக புகார் அளிக்க 1044 22 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் உயிரிழப்பிற்கு தமிழக அரசு தான் காரணமா என்ற கேள்விக்கு, அரசு தொழிலாளர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை, முறையாக செயல்படவில்லை . உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான உபகரணங்கள் தேவைப்படுவோர் ஆணையத்தை தொடர்பு கொண்டு தொழில் நிறுவனங்கள் அளிக்கும் கூட்டாண்மை சமூக பங்களிப்பு திட்டத்தில் இருந்து கிடைக்கும் நிதியில் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம் .
உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாத உள்ளாட்சி அமைப்புகள் குறித்து ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்திற்கு இழப்பீடு பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர் என்றார் வெங்கடேசன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu