மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மந்த கதியில் நடைபெற்று வரும் மேம்பாலம் பணி

மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மந்த கதியில் நடைபெற்று வரும் மேம்பாலம் பணி

மீஞ்சூர் ரயில்வே கேட்டில் ஏற்பட்ட வாகன நெரிசல்

மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பாலம் பணிகள் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மந்த கதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளால் சுமார் 30 நிமிடம் ரயில் சேவை பாதிப்பு. ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் ரயில்வே கேட்டை மூட முடியாமல் ஊழியர்கள் திணறல்.

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மந்தகதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தைமஞ்சி, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் மக்களின் பல்லாண்டு கோரிக்கையின் பேரில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் உள்ளது.

இதன் காரணமாக ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு திடீரென மீஞ்சூர் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரயில்வே கேட் திறக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அதனை மீண்டும் மூட முடியாமல் இரு புறங்களில் இருந்து வாகனங்கள் தொடர்ந்து சென்றன.

இதனால் ரயில்வே கேட்டை மூட முடியாமல் அங்கிருந்த ஊழியர்கள் திணறினர். இதன் காரணமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்ல வேண்டிய ரயில்கள் மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு சிறிது தூரம் முன்பாகவும், நந்தியம்பாக்கம் என ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

மேலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்ல வேண்டிய ரயிலும் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக ரயில்வே கேட்டை மூட முடியாததால் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு இரு புறங்களிலும் வாகனங்களை தடுத்து நிறுத்தி ரயில்வே கேட் மூடியதற்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடர்ந்தது.

இதே போன்ற நிலை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மந்தகதியில் நடைபெற்று வரும் மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story