வரவு செலவு கணக்கு காட்டாததால் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
முறையாக கணக்கு காட்டாததால் ஆரணி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த மன்ற உறுப்பினர்கள்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம் ,ஆரணி பேரூராட்சி மன்ற கூட்டம், மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மன்ற பொருட்களை இளநிலை உதவியாளர் முருகவேல் வாசித்தார். அப்பொழுது டெங்கு காய்ச்சலுக்காக மருந்து அடித்ததாக சுமார் ரூ.2 லட்ச செலவு செய்ததாக கணக்கு கூறினார்களாம். மேலும், மழை நீர் கால்வாய்க்கு கான்கிரீட் மூடி அமைப்பதில் பல்வேறு கணக்கு குளறுபடி இருப்பதாக மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆரணி சுப்ரமணிய நகர் பகுதியில் சாலை அமைக்காமலேயே பில் போட்டதாக பேரூராட்சி மன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார். மேலும்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக பதவியேற்றபோது பேரூராட்சி மன்றத்தின் கடன் ரூபாய் ஒரு கோடி என்று கூறப்பட்டது.ஆனால், தற்போது மூன்று கோடி கடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிக்கு எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. அப்படி இருக்க கடன் ஏன் கூடியது? என்று காரசாரமாக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு பேரூராட்சி மன்ற தலைவரும், செயல் அலுவலரும் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொன்னரசி, சுஜாதா, சுகன்யா, அருணா, சதீஷ், முனுசாமி, குமார், ரகுமான்கான் உள்ளிட்டோர் கூட்டத்தை புறக்கணித்து மன்ற வளாகத்தை விட்டு வெளியேறி வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
மேலும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுகுமார் மன்ற பொருட்களை வாசிக்கும் முன்னரே கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டார். இதனால், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது குறைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி உதவி இயக்குனர், இயக்குனர், மாவட்ட ஆட்சியர்,உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழக முதல்வர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த வெளிநடப்பு காரணத்தினால் பேரூராட்சி மன்ற பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu