சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நாளை முதல் மீண்டும் அனுமதி…

சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நாளை முதல் மீண்டும் அனுமதி…
X

சிறுவாபுரி முருகன் கோயிலில் நடை சாத்தப்பட்டது.

சந்திர கிரகணம் காரணமாக சிறுவாபுரி முருகன் கோயிலில் இன்று பிற்பகல் நடை மூடப்பட்டது. பரிகார பூஜைகளுக்குப் பிறகு காலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஆகிய நாட்களில் இந்து கோயில்களில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு நடை சாத்தப்பட்டு, அதன் பிறகு பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான இந்து கோயில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் இன்று பிற்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய்தீபம் ஏற்றி கோயிலை சுற்றி வளம் வந்து வழிபட்டால் இடம் வாங்குதல், வீடு கட்டுதல், பிள்ளை பாக்கியம், திருமண தடை, உள்ளிட்டு வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதனால், அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, தச்சூர், ஜனபசத்திரம், சோழவரம், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரசினம் செய்வது வழிபடுவது வழக்கம்.

அதுமட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி அன்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேல தாளங்களுடன் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓதி விமான கோபுரங்களுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில், கலந்துகொண்ட ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

கும்பாபிஷேகத்துக்குப் பிறகு தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை வெகு விமர்சையாக நடந்து முடிவடைந்தது. இந்நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் 12 மணி வரை மட்டுமே ஆலயத்தின் சார்பில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே கோவில் நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி, செவ்வாய்க்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் சிறுவாபுரி கோவிலில் வழிபாடு செய்த நிலையில் பிற்பகல் 1 மணிக்கு கோயிலின் நடை மூடப்பட்டது. தொடர்ந்து உற்சவர் ஆலயத்திற்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டு கோவில் நடை சாத்தப்பட்டது.

சந்திர கிரகணம் முடிவடைந்த பின்னர் மாலையில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோயில் முற்றிலும் மூடப்படும் எனவும், நாளை புதன்கிழமை காலையில் பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Tags

Next Story