பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது பற்றி விசாரணை

பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது பற்றி விசாரணை
X

பொன்னேரி அருகே சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை.

பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது பற்றி இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலையின் முகத்தை சிதைத்தும், கையை சேதப்படுத்திய இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு இங்கு சட்ட மேதையின் முழு உருவ சிலை நிறுவப்பட்டிருந்தது. வழக்கமாக சிலைகளுக்கு அமைக்கப்படும் பாதுகாப்பு வேலியுடன் இந்த சிலை உள்ளது. இன்று அதிகாலை கிராம மக்கள் பார்த்த போது அண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அம்பேத்கரின் முகத்தை சிதைத்தும், கையை சேதப்படுத்தியும் தோள்பட்டையுடன் இணையும் பகுதியில் கையை உடைக்க மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர். முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், கைவிரல் துண்டிக்கப்பட்டு சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது. அண்ணலின் சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்த கிராம மக்கள் தற்பொழுது சிலை அருகே திரண்டனர். இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதற்கட்டமாக துணியை கொண்டு சிலையை மூடினர். கிராமத்திற்குள் பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் நெடுவரம்பாக்கம் கிராமத்தில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறையுடன் இணைந்து சேதப்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் சிலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story