பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகளுக்கு தீ: அதிகாரிகள் விசாரணை
பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்த மீன்பிடி வலைகள்
பழவேற்காடு அருகே லைட் ஹவுஸ் பகுதியில் மீன் பிடி படகுகளை நிறுத்துமிடத்தில் வைத்திருந்த வலைகளில் திடீர் தீ பற்றி சுமார் 80 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதமானது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட அரங்கம் குப்பம் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலான கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு படுகுகள் நிறுத்துமிடத்தில் படகுகள் மற்றும் வலைகளை வழக்கம் போல் வைத்து வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு 2 மணி அளவில் படகுகள் நிறுத்தும் இடத்தில் புகை மற்றும் தீப்பற்றி எரிந்ததை கண்ட அப்பகுதி மீனவர்கள் ஓடி வந்து பார்த்தபோது பெரும்பாலான வலைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து மீதமுள்ள வலைகளை தீயை அணைத்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் ஏராளமான வலைகள் தீயில் எரிந்து நாசமானது.
இது குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு, மற்றும் கிராம நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட மீனவ துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டதில்பேரில் அதிகாரிகளும் மற்றும் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்தும் எவ்வளவு சேதாரம் என்பது குறித்தும் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தியதில் சுமார் 50 மீனவர்களுக்கு சொந்தமான மீன் பிடி வலைகளின் மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கையில் தாங்கள் நாள்தோறும் மீன் பிடித்து அதனை விற்று அதில் வருகின்ற வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், தற்போது இந்த தீயின் காரணத்தினால் தாங்கள் வலைகள் எல்லாம் எரிந்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். மீன்பிடி வலைகளை நம்பி மீன்பிடித்த மீனவர்களுக்கு தங்களுக்கு சொந்தமான வலைகள் எரிந்ததால் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.
இதனால் உடனடியாக தமிழக அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தால் லைட்ஹவுஸ் கடற்கரை பகுதியில் உள்ள பெரும்பான்மையான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu