சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம்: விக்கிரமராஜா

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம்: விக்கிரமராஜா
X

பொன்னேரியில் கடை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். மின் கட்டணம், கட்டிட வரி உள்ளிட்டவற்றை தமிழக அரசு குறைக்க வேண்டும். விளம்பரங்களில் நடிப்பவர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் நடிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வணிகர்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில் அதிகாரிகள் குழுவினர் கடைகளில் பொருட்களை வாங்கி ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சோதனை முறையை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்தவில்லை என்பதால் அவர்களிடம் வாடகை செலுத்தி வரும் கடைக்கும் சேர்த்தே சீல் வைக்கும் நடவடிக்கையை தவிர்த்து கடை உரிமையாளரிடம் நேரடியாக வாடகையை வசூலித்து கொண்டு சீல் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். 14வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதில் வணிகர்கள் உறுதியாக இருப்பதாகவும், திடீரென கடை சீல் வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என கேட்டு கொண்டார். குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க கூடாது என்பதில் வணிகர் சங்க பேரமைப்பினர் உறுதியாக உள்ளதாகவும், அதனையும் மீறி விற்பனை செய்பவர்களுக்கு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிப்பதில்லை என்றார்.

மின் கட்டணமும், கட்டிட வரியும் அதிகளவில் உயர்ந்துள்ளதாகவும், மின் கட்டணத்தையும், கட்டிட வரியையும் தமிழக அரசு குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிறுகுறு தொழில் பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை வைத்தார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் எனவும், நாடு முழுவதும் பொருட்களை பேக்கிங் செய்வது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஒரே சட்டம் அமல்படுத்தி வணிகர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் என விளம்பரங்களில் நடிப்பவர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்றார். தற்போது ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதிலும் பல நடிகர்கள் நடித்ததாகவும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையும் அப்போது சுட்டிக்காட்டினார். முன்னதாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகையை வரன்முறைப்படுத்தும் சீரமைப்பு குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பிற்கு பிரதிநித்துவம் அளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விக்கிரமராஜா நன்றி தெரிவித்து கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!