பயணிகளை தெறிக்க விடும் மாணவர்களை தெறிக்க விடுமா காவல்துறை?

பயணிகளை தெறிக்க விடும் மாணவர்களை தெறிக்க விடுமா காவல்துறை?
X

புறநகர் ரயிலில் பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்தபடி செல்லும் மாணவர்கள்

புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளால் நடை மேடையில் தேய்த்தபடி அச்சுறுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது

சென்னையில் ரயில் நடைமேடையில் பட்டா கத்திகளை உரசியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது பயங்கரமான ஆயுதங்களால் மற்றும் பட்டாகத்திகளால் மோதிக்கொள்வது. இது போன்று செயல்களில் ஈடுபட்டு வரும்போது சில நேரங்களில் ஒரு நொடியில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டா கத்தியை நடைமேடையில் உரசியபடி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என முக்கிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். இவ்வாறு வருகின்றபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதால், தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, பேருந்துகளில் ரூட் தல பிரச்னை தொடங்கி தற்போது ரயில்களிலும் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் சிலர் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரயில் நிலையங்களின் நடைமேடையில் பட்டா கத்தியை உரசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழைந்ததும் நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி பயணிக்கின்றனர். அடுத்தடுத்த ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் நுழையும் போது வீடியோ எடுக்க சொல்லி மீண்டும் நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி பயணிக்கின்றனர். பட்டா கத்தியை உரசியபடி பயணித்ததால் சக ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது ரயிலில் பயணம் செய்தவர்களுக்கும், வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.

மாணவர்களே காட்சிப்படுத்திய இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பார்த்தும் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

கல்லூரி மாணவர்கள் சமீப காலமாக ரயிலில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் சில மாணவர்கள் அத்துமீறி மோதலில் ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில் கூட ரயில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் கல்லூரி மாணவன் ஒருவர், பிளாட்பாரத்தில் கத்தியை வைத்து தேய்த்தபடி பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் சென்ற காட்சிகள் வைரலானது. இதனையடுத்து, அரிவாள், கத்தியுடன் ரயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்திருந்தது.

காவல்துறையின் எச்சரிக்கையும் மீறி கல்லூரி மாணவர்கள் பிளாட்பாரத்தில் கத்தியை வைத்து தேய்த்தபடி சென்றதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என கேள்வி எழுப்பும் பயணிகள் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்