சிறுவன் ஓட்டி வந்த பைக் லாரி டயரில் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு..!

சிறுவன் ஓட்டி வந்த  பைக்  லாரி டயரில் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு..!
X

விபத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவன் முகமது ரியாஸ். விபத்தில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கிய இருசக்கர வாகனம்.

சிறுவன் ஓட்டி வந்த பைக் லாரி டயரில் சிக்கி பின்னால் அமர்ந்திருந்த கல்லூரி மாணவன் உயிரிழந்தார். சிறுவனுக்கு பைக் கொடுத்த உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி அருகே சிறுவன் ஒட்டிய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரி டயரில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு. சிறுவனுக்கு வாகனத்தை கொடுத்த வாகன உரிமையாளர் கைது.

சென்னை பெரம்பூர் ஜமாலியா தெருவைச் சேர்ந்த முகமது ரியாஸ் ( வயது 18). தனியார் கல்லூரியில் பி.காம். 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பயிலும் தமது நண்பன் (17வயது). சிறுவனுடன் கடந்த 23ஆம் தேதி காலையில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

17வயது சிறுவன் இருசக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற நிலையில் முகமது ரியாஸ் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். சிறுவாபுரி நோக்கி சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அழிஞ்சிவாக்கம் மேம்பாலத்தின் மீது முன்னால் சென்ற 2 லாரிகளில் ஒன்று திடீரென பிரேக் போட்டபோது அதன்மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை பிரேக் பிடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி இரண்டு லாரிகளுக்கும் இடையே கீழே விழுந்தனர். அப்போது மற்றொரு லாரியின் சக்கரத்தில் சிக்கி இருவரும் பலத்த காயமடைந்தனர்.

உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ரியாஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதில் காலில் பலத்த காயமடைந்த 17வயது சிறுவன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிறுவன் வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையால் மரணத்தை விளைவித்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு வாகனத்தை கொடுத்த உறவினரான புளியந்தோப்பைச் சேர்ந்த வினித் (25) என்பவரை செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself