முன்னாள் அமைச்சர் சுந்தரத்திற்கு பாராட்டு விழா
நகர்புற மேம்பாட்டுதுறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்திற்கு சந்தன மாலை மற்றும் கேடயம் பரிசளித்து கவுரவித்தனர்
முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் கடுமையான உழைப்பிற்காக அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் தலைவர் கருணாநிதி.மீஞ்சூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு புகழாரம் சூட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் உள்ள எழில் திருமண மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணா விருது பெற்ற முன்னாள் அமைச்சரும் திமுக ஆதி திராவிட நலத்துறை அணி தலைவருமான க.சுந்தரத்திற்கு பாராட்டு விழா, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடைபெற்றது.
ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக மற்றும் மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூர் செயலாளர் க.சு.தமிழ் உதயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் நகர்புற மேம்பாட்டுதுறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்திற்கு சந்தன மாலை மற்றும் கேடயம் பரிசளித்து கவுரவித்தனர்.விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில் தமிழக முதல்வர் கையில் விருது பெறும் விதத்தில் க.சுந்தரம் கழக பணியாற்றியதை போல அவரது பிள்ளைகளும் கழகத்திற்காக தங்களை அர்பணித்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் தமிழகத்தின் மின்சார பற்றாக்குறையை போக்கிட வடசென்னை அனல்மின் நிலையம் அமைத்திட இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப் படுத்திட வேண்டும் என அன்றைய முதல்வர் மு.கருணாநிதி உத்தரவிட்டதை தொடர்ந்து க.சுந்தரத்தின் தீவிர முயற்சியால் வடசென்னை அனல் மின்நிலையம் அமைக்க முடிந்தது என குறிப்பிட்டவர் இதன் காரணமாகவே எம்எல்ஏவாக இருந்த க.சுந்தரத்தை பால்வளத்துறை அமைச்சராக்கி அன்றைய முதல்வர் கருணாநிதி அழகு பார்த்தார் என புகழாரம் சூட்டினார். இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் டாக்டர் ஜெயக்குமார் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், பூந்தமல்லி அ.கிருஷ்ணசாமி, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், பொன்னேரி துரை.சந்திரசேகர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் க.சு.தமிழ் ப்ரியன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu