குடியிருப்பு நடுவில் நான்கு வழி சாலைக்கு நிலம் எடுப்பு:கிராம மக்கள் மறியல்
குடியிருப்புகள் வழியே 4வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே குடியிருப்புகள் வழியே 4வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். குடியிருப்புகளை தவிர்த்து மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை. சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுவாயல் வழியாக பெரியகாவனம், சின்னக்காவனம் பகுதிகளை உள்ளடக்கி பழவேற்காடு வரையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னகாவணம் கிராமத்தில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், கோயில்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி 4 வழி சாலை, இணைப்பு மேம்பாலம் அமைப்பதற்காக அங்குள்ள குடியிருப்புவாசிகளை உடனடியாக வீடுகளை காலி செய்யுமாறு வருவாய்த்துறையினர் மூலம் நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூர்வீகமாக வாழ்ந்து வரும் தங்களை திடீரென வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற கூறுவது ஏற்க முடியாது என்றும், புதுவாயலில் இருந்து ஏலியம்பேடு, சின்னகாவணம் இடையே பல ஏக்கர் பரப்பளவிலான தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அதன் வழியாக 4 வழி சாலையை அமைக்க வேண்டும் எனவும், அதானி குழுமத்தின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் செயல்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், 4 வழி சாலை திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி சின்னக்காவனம் கிராம மக்கள் பொன்னேரி-பழவேற்காடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம முக்கியஸ்தர்களை கொண்டு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி - பழவேற்காடு சாலையில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu