எரிபொருள் கலப்படம் செய்த விவகாரத்தில் 9 பேர் கைது
பைல் படம்
சோழவரம் அருகே எரிபொருள் கலப்பட ஆயில் தயாரித்த தொழிற்சாலையின் மேலாளர் உட்பட 9 பேரை கைது செய்து, 2 டேங்கர் லாரிகள், 2.70 லட்சம் லிட்டர் கலப்பட ஆயில் மற்றும் ஆயில் தயாரிப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த நல்லூரில் கலப்பட ஆயில் தயாரிப்பதாக செங்குன்றம் மாவட்ட துணை ஆணையர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் நல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோழவரம் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு போலியாக கலப்பட ஆயில் தயாரிப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து கலப்பட ஆயில் நிறுவனத்தின் மேலாளர்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அசோக், முகேஷ்குமார் மற்றும் கலப்பட ஆயில் தயார் செய்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஊழியர்கள் ராம்சிங், பிந்திரபிரசாத், அசோக்குமார், தீபக், மன்சாராம், கலப்பட ஆயிலை டேங்கர் லாரிகளில் ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் பண்ருட்டி தொரப்பாடியை சேர்ந்த உதயராஜ் , திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 2 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் கலப்பட ஆயில், 2 டேங்கர் லாரிகள் மற்றும் கலப்பட ஆயில் தயாரிப்புக்கு உபயோகிக்கப்பட்ட டேங்கர்கள், மோட்டார்கள் மற்றும் மூலப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள், பறிமுதல் செய்யப்பட்டவற்றை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். எரிபொருள் கலப்பட ஆயில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, எந்தெந்த இடங்களுக்கு இங்கிருந்து செல்கிறது, யார் யாருக்கு இதில் தொடர்பு என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu