குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் போராட்டம்
குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க கோரி போராட்டம் நடத்திய மக்கள்.
ஈகுவார்பாளையதில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட தனியார் தொழிற்சாலையால் கொட்டப்பட்ட கழிவுப் பொருளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.ஈகுவார் பாளையத்திலிருந்து சித்தூர் நத்தம், காரம்பேடு, குருராஜ கண்டிகை வழியாக கவரப்பேட்டை-சக்தியவேடு நெடுஞ்சாலையை சென்றடைய கூடிய சாலையின் ஒரு பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை கடந்த 15 வருடங்களாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். அதேபோல் சித்தூர் நத்தம், காரம்பேடு, குருராஜ கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள பத்துக்கு மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் செல்லும் வாகனங்கள் இந்த சாலை பிரதான சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தனர்.ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிற்சாலைகளுக்கு செல்லும் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் சென்று வருவதால் சாலை குண்டும் குழியுமாக மாறி காட்சியளித்து வருகிறது. இதனால் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே இந்த சாலையை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் சென்றால் கனரக வாகனங்கள் பழுதடைவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பாக வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் வனத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த காரணத்தினால் இந்த சாலை பல ஆண்டுகளாக படுமோசமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் இச்சாலையை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் செல்ல சாலையில் உள்ள பள்ளங்களை தொழிற்சாலைகள் நிர்வாகம் மூட வேண்டியுள்ளது. இவ்வாறு மூட தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலையில் உள்ள கழிவு பொருட்களை பயன்படுத்தி மேற்கண்ட சாலை உள்ள பள்ளங்களை நிரப்பி வந்துள்ளனர்.
பள்ளங்களை கொட்டப்படும் கழிவு பொருட்கள் நாளடைவில் வாகனங்கள் செல்லும்போது புகை மண்டலமாய் பரவி குடியிருப்பு பகுதிகளில் உள்ள உணவு, குடிநீர், துணி என அனைத்திலும் படிந்து விடுகிறது. மேலும் வீடு முழுவதும் பரவி உடலில் ஒட்டிக் கொள்கிறது. இவ்வாறு பொருட்கள் சேதமடைவதுடன் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தும்மல், இருமல், சளி உள்ளிட்ட உடல் உபாதைகளும் ஏற்பட்டு பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் பகுதி மக்கள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் கழிவு பொருட்களை சாலையில் கொட்டுவதை முற்றிலுமாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் தங்களின் சுயலாபத்திற்காக குடியிருப்பு பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையை சமன்படுத்த கழிவுப்பொருட்களை கொட்டியதால் ஆத்திரமடைந்த அப்பகுதி சார்ந்த மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அவ்வழியில் வந்த வாகனத்தை மடக்கி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாதர்பாக்கம் நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் ஈகுவார் பாளையம் - ஜி ஆர் கண்டிகை சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதிரிவேடு காவல் நிலைய போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தொழிற்சாலை நிர்வாகத்திடம் இதுகுறித்து பேசி சுமூக முடிவு காண்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கூறியதன் பேரில் கூட்டம் கலைந்து சென்றது.மேலும் இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் வெகு விரைவில் பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu