வாந்தி பேதி ஏற்பட்ட பேரண்டூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வாந்தி பேதி ஏற்பட்ட பேரண்டூர் கிராமத்தில் வினியோகிக்கப்படும் குடிநீரை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2நாட்களில் இந்த கிராமத்தை சேர்ந்த முனுசாமி, ஏழுமலை ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பேரண்டூர் கிராமத்தில் சுகாதார துறையினர் முகாமிட்டுள்ளனர்.
அங்குள்ள அரசு பள்ளியில் மருத்துவ முகாம் அமைத்து வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளியூரில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெளியில் இருந்து டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட குடிநீரின் தரம் குறித்து மாதிரிகள் கொண்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து முகாமில் சிகிச்சை பெற்று வருவோரிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
தங்களது கிராமத்தில் ஆழ்துளை குடிநீர் இணைப்பில் பிரச்சினை இருப்பதாகவும், அதனை உடனே மாற்றுமாறு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். மேலும் எப்பொழுதும் இல்லாமல் தற்போது இதுபோன்ற வாந்தி, பேதி பாதிப்புகள் ஏற்படும் வகையில் கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், உடனே அதனை சரிசெய்யுமாறு முறையிட்டனர். குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் முறையாக தீர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அப்போது உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu