பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெருக்கடி
போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.
புறவழி சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக் போலீசார் பற்றாக்குறையால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் அவதி அடைந்தனர். கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழி சாலை பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் சுயம்புவாக எழுந்திருளிய புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் விழா 14 வார காலம் வெகு விமர்சையாகவும் கோலாகலமாக நடைபெறும்.
இந்த திருவிழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர்,திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா,தெலுங்கானா, புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் சொந்த வாகனங்களிலும், பேருந்துகளிலும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கார்,ஜீப், டிராக்டர்,மாட்டு வண்டி போன்ற வாகனங்களில் சனிக்கிழமை பெரியபாளையம் வந்து இரவு தங்கி ஞாயிற்றுக்கிழமை காலையில் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் மொட்டை அடித்து ஆடு, கோழி என பலியிட்டு வாடை பொங்கலிட்டு ஆலய வளாகத்தில் வேப்ப மரத்தடியில் படையல் இட்டு வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி, அங்க பிரதட்சணமும் செய்தும், சக்தி மண்டபத்தில் இருக்கின்ற திரிசூலத்திற்கு பக்தர்கள் மஞ்சள், குங்குமங்களால் அர்ச்சனை செய்தும், எலுமிச்சை மாலை பூமாலைகளை அணிவித்தும் அதன் சுற்றி வலம் வருவது வழக்கம்.
பின்னர் குழந்தை பாக்கியம் வேண்டி சக்தி மண்டபம் அருகே உள்ள மரத்தில் பெண்கள் தொட்டில் கட்டி, திருமணம் ஆகாத பெண்கள் மஞ்சள் கயிற்றை கட்டியும் நேர்த்தி கடனை செலுத்துவர். இதனைத் தொடர்ந்து இலவச தரிசனம் ரூ..100 கட்டண தரிசன கியூவில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.5.வது ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம்,இளநீர், ஜவ்வாது,தேன்,மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தும், பல்வேறு வண்ண மலர்களாலும், ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை 4 மணி அளவில் உற்சவர் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் கோவில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார், இதன் பின்னர் பெரியபாளையம் முக்கிய வீதிகளிலும் உலா வந்தார். பெரியபாளையம் பவானி அம்மனை குடும்பத்துடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். ஐந்தாம் வாரம் திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சுமார்1.லட்சத்திற்கும் மேலாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இதுகுறித்து கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் பொதுமக்களும் சிலர் தெரிவிக்கையில் புகழ்பெற்ற பவானி அம்மன் ஆலயத்திற்கு ஆடி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மனை தரிசனம் செய்து வெகு தூரங்களிலிருந்தும் வருகின்றோம், அதிக அளவில் இந்த ஆடி மாதத்தில் பக்தர்கள் வருவதாலும் அவர்கள் கொண்டு வரும் வாகனங்களாலும் தேர்வாய் தொழில் பூங்கா அமைந்திருப்பதாலும், திருப்பதி-சென்னை சாலை என்பதால் சென்னையில் இருந்து ஆந்திராவிற்கும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் இவ் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சிறிய முதல் கனரக வாகனங்கள் வந்து செல்வதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. பெரியபாளையம் பஜார் பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமிப்பு செய்தும் கட்டிடங்களும் கட்டியுள்ளதால் சாலை மிகவும் குறுகிய காரணத்தினால் எளிதாக வாகனங்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளதாகவும், எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவு படுத்த வேண்டும் எனவும்,
மேலும் போக்குவரத்து நெரிசல் குறைக்க பெரியபாளையம் அருகே வடமதுரை கூட்டுச் சாலை பகுதியில் ரூ.26 கோடி செலவில் புறவழி சாலையை பணிகளை கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் நிலையில் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பக்தர்கள் வந்த வாகனங்களால் பெரியபாளையத்தில் போலீசார் பற்றாக்குறை காரணத்தினால் போக்குவரத்து சரி செய்ய போலீசார் திணறினர். இப்போக்குவரத்து காரணத்தினால் சுமார்4 கிலோ மீட்டர் அளவிற்கு போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது. இந்த போக்குவரத்து காரணத்தினால் வயதான முதியவர்கள், குழந்தைகள்,பெண்கள் என பலர் சிரமப்பட்டனர்.
எனவே தமிழக அரசு இதில் உடனடி கவனம் செலுத்தி ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழி சாலை பணிகளை விரைந்து தொடங்கவும் போக்குவரத்து சுமையை குறைத்து ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக வந்து அம்மனை தரிசனம் செய்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் தற்போது 159.கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடி காணிக்கை செலுத்தும் கட்டிடம், அன்னதான கட்டிடம், பொங்கல் வைக்கும் மண்டபம், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய க்யூ வரிசை, உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதால், பக்தர்கள் குளிப்பதற்கு, கழிப்பறை வசதி,குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி தனியார் கடைக்காரர்கள் குடிநீர், கழிப்பறை, குளியலறை பயன்படுத்த அதிக கட்டணம் வசூலிப்பதால் சாமான்ய பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu