கஞ்சா விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை

கஞ்சா விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை
X

கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

ஆரணியில் கஞ்சா விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த, ஆரணி இருளர் காலணியில் வசித்து வருபவர் சின்னமணி (என்கிற) கானா மார்க்மணி (30). இவர்ஆரணியில் உள்ள பழைய ஆனந்தா திரையரங்கம் அருகே சால்னா கடை நடத்தி வருகிறார்.

மேலும், இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரியபாளையம் தண்டுமாநகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சரத்( 22) இவரது நண்பர் மாரிமுத்து (25) ஆகிய இருவரும் பெரியபாளையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் ஆரணியில் உள்ள சின்னமணி வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் கஞ்சா வாங்கும் போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சின்னமணி கத்தியால் சரத், மாரிமுத்து உள்ளிட்ட இருவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே சரத் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மேலும், சரத்தின் நண்பர் மாரிமுத்து வெட்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பித்து வீட்டின் பின்புறம் இருந்த இருட்டில் ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த சரத் சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சாரதி, பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்து சின்னமணியை சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

பின்னர், பலியான சரத்து உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சரண்(23) மாரிமுத்து(25) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி மூவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

சரத் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் பெரியபாளையத்தில் இருந்து ஆரணிக்கு வந்து சின்னமணியின் சால்னா கடையை அடித்து நொறுக்கினார்கள். மேலும், அவரது வீட்டில் இருந்தவர்களையும் தாக்கினார்களாம். கஞ்சா பிரச்சனையால் நடைபெற்ற கொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா போதை பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும் எவ்வித பயன் இல்லை என்றும் கூறினர்.

போதை பொருள் விற்கும் நபர்களை மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டும்தான் இளைஞர்கள் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் என்பதால், தண்டனைகளை கடுமையாக்கினால்தான் இதுபோன்று உயிர் பலிகள் ஏற்படாமல் இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!