கும்மிடிப்பூண்டி அருகே கோவில் சீல் அகற்றப்பட்டு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்

கும்மிடிப்பூண்டி அருகே  கோவில் சீல் அகற்றப்பட்டு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்
கும்மிடிப்பூண்டி அருகே சாமி தரிசனம் செய்ய இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு எட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த கிராம தேவதை ஆலயம் 1998ல் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

இந்த ஆலயத்திற்கு கடந்த 2002 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது பட்டியலின மக்கள் கோவிலில் வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அப்போது ஆலயத்திற்கு சீல் வைக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு சீல் அகற்றப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் பட்டியலின மக்கள் அங்கு சென்று வழிபட எதிர்ப்பு நீடித்ததால் அந்த ஆலயத்திற்கு சென்று வழிபடாமலே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புணரமைப்பு பணிகள் முடிவடைந்து எட்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 9ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்ற போது மாற்று சமூகத்தினர் தங்களுக்கு சொந்தமான பாதையில் வரக்கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாததால் ஆலய கதவுகளை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் இருதரப்பினர் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு எட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் எட்டியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். பட்டியலின மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்களது குடியிருப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர்.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் கோவிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டதும் மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். தொடர்ந்து கோவில் பிரகாரம், மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டதை தொடர்ந்து பட்டியலின மக்கள் உற்சாகத்துடன் கோவிலுக்குள் வந்தடைந்தனர்.

கும்பாபிஷேகத்தின் போது வைக்கப்பட்ட சீலுடன் கோவில் பூட்டப்பட்ட நிலையில் ஒரு மாதம் கழித்து திறக்கப்பட்ட கோவிலுக்கு பூசாரி பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்து தொடர்ந்து பூஜை வேலைகளை தொடங்கினார். வழிபாடு செய்வதற்காக பூஜை பொருட்கள் பழங்கள் என சீர்வரிசை தட்டுடன் வந்த பட்டியலை இன மக்களின் பூஜை பொருட்களை வைத்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் எட்டியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீப தூப ஆராதனைகள் செய்யப்பட்டபோது பட்டியலின மக்கள் நெகிழ்ச்சியுடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இத்தரப்பினர் இடையே இருந்து பிரச்சனை காரணமாக கோவிலுக்கு சீழ் பட்டன் வைக்கப்பட்ட நிலையில் அவர்களை அழைத்து சமாதானப்படுத்தி ஊருக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியத்தை எடுத்துரைத்ததாகவும் இதில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முதற்கட்டமாக தற்பொழுது இந்த கோவிலின் சீல் அகற்றப்பட்டு சமூகத் தீர்வு ஏற்றப்பட்டதாக கூறினார்.

இனி வரும் காலங்களில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்படாத வகையில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் வழுதலம்பேடு கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதகாவும், சமுதாய கூடம், புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கோவிலில் வழிபாடு செய்து முடித்து வந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார். தொடர்ந்து பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். கிராமத்திலிருந்து சிறுவர்கள் கல்வி விளையாட்டு என அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அடுத்ததாக பாராட்டு விழாவிற்கு அதிகாரிகள் அனைவரும் நாங்கள் மீண்டும் இந்த கிராமத்திற்கு வரும் வகையில் ஒத்துழைக்க வேண்டும் என அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதுகுறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில் தங்களது பல்லாண்டு கனவு நினைவானதாகவும் பிறந்தது முதலில் இந்த கோவிலுக்கு செல்லாமல் இருந்த நிலையில் தற்போது அம்மனை தரிசித்தது மனநிறைவைத் தருவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினர் என அனைத்து அதிகாரிகளுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

முன்னதாக பட்டியலின மக்கள் ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும் நிகழ்விற்காக மாவட்ட எஸ்பி தலைமையில் 2க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story