சஸ்பென்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!

சஸ்பென்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!
X
கும்மிடிப்பூண்டி அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 150.க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் அறிவியல் ஆய்வகம், மற்றும் மாணவர்களுக்காக கட்டப்பட்ட கழிவறை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமம் பட்டு வந்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் சீனிவாசலுவிடம் பலமுறை கூறியும் இந்தப் பிரச்சனைகள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பலமுறை தலைமை ஆசிரியர் மீது புகார் மனு அளித்ததின் பேரில் பொன்னேரி வட்டார கல்வி அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் மாவட்ட கல்வி நேர்முக அலுவலர் பிரேம் குமார், பாபு ஆகியோர் பள்ளி வளாகத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது மாணவர்கள் கழிப்பிடம் அறைகளை சுத்தம் செய்யாதது தெரிய வந்தது. தலைமை ஆசிரியர் சீனிவாசலுவைப் பற்றி சக ஆசிரியர்கள் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மேலும் பல குற்றச்சாட்டுகளை கூறினர். இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையாசிரியர் சீனிவாசலுவை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் சீனிவாசலு நேற்று முன்தினம் ஈகுவார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டார். இது அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், சஸ்பென்ட் செய்யப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசலு இந்தப் பள்ளிக்கு வந்ததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மரியில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், பள்ளியில் இந்த தலைமை ஆசிரியர் இருக்கும் வரையில் மாணவர்களின் எதிர்காலம் முற்றிலுமாக பாதிக்கப்படும். உடனடியாக இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

இதற்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைஞர் சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!