பெரியபாளையம் அருகே பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்ற கோரிக்கை
பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம்.
பெரியபாளையத்தில் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடத்தை கட்டி தர குழந்தைகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள பாரதியார் நகர் பகுதியில் சுமார் 30ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேதாஜி நகர், கண்ணப்பன் நகர், பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 35.க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.தற்போது இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து வெளிப்புறம், மற்றும் உள்புறம் பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு கட்டிடத்திற்கு மேல் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால் கட்டிடத்திற்குள் மழைநீர் கசிந்து உள்ளே வருவதால் குழந்தைகளுக்கு சமைக்கும் அரிசி, என்னை, சத்து மாவு, முட்டை உள்ளிட்ட பொருட்கள் நனைந்து வீணாகிறது. மேலும் இந்த கட்டிடத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற வடிகால் கால்வாய் இல்லாத காரணத்தினால் அங்கன்வாடி மையக் கட்டிடம் வளாகத்தை சுற்றி தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்தக் கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர அப்பகுதி மக்களும் இந்த மையத்தில் படிக்கின்ற குழந்தைகளின் பெற்றோர்களும், பலமுறை ஊராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுவதோடு ஆபத்து விளைவிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி இந்த பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu