ஆத்துப்பாக்கத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

ஆத்துப்பாக்கத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
X

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிய அதிகாரிகள்.

ஆத்துப்பாக்கத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3வீடுகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

ஆத்துப்பாக்கம் கிராமத்தில் கூலி வேலை செய்யும் மூன்று பெண்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். நெடுஞ்சாலை இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறு பல முறை நோட்டீஸ் வழங்கியும் காலி செய்யாமல் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் 3பேருக்கு வருவாய்த்துறை சார்பில் மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனையடுத்து கும்முடிபூண்டி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி தலைமையில் ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், துணை வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் வீடுகளை இடிக்க 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகளை அகற்றினர்.

அப்போது பெண்கள் தங்களது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பெண்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளில் இருந்த பொருட்களை வெளியேற்றிய அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3வீடுகளை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றினர்.

பல ஆண்டு உழைப்பில் கட்டப்பட்ட வீடுகள் தங்களது கண் முன்னே இடித்து தரைமட்டம் செய்யப்படுவதை கண்டு துயரம் தாங்காமல் பெண்கள் அழுது புரண்டு கண்ணீர் வடித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!