கும்மிடிப்பூண்டி அருகே பெரிய குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி அருகே பெரிய குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

சீரமைக்கப்படவேண்டிய பெரிய குளம்.

கன்னிகைப்பேர் ஊராட்சியில் உள்ள பெரிய குளத்தை சீர் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்களின் தாகம் தீர்த்துவைத்த பெரியகுளம் தற்போது முள் புதர்கள் வளர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிப்பதால் ஆக்கிரமிப்பை அகற்றி சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 5000. க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கன்னிகைப்பேர் பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது. கடந்த 50 வருடத்திற்கு முன்பு கிராமத்தில் உள்ள மக்கள் இந்த குளத்தின் நீரை நம்பி வாழ்ந்து வந்தனர்.

தற்போது இக்குளம் சீரழிந்து காலப்போக்கில் இந்த குளத்திற்குள் தண்ணீரை கொண்டுவரும் வரும் வரத்து கால்வாய்கள் நாளடைவில் காணாமல் போய்விட்டதோடு குளம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது . மேலும் இந்த குளத்தை சுற்றி உள்ள குடியிருப்புகளிலிருந்து பயன்படுத்தும் கழிவு நீரானது குளத்தில் வந்து விழுகிறது. இதனால் குளம் சேரும் சகதியாக மாறி துர்நாற்றமும் வீசுகிறது.

மேலும் குளத்தில் அடர்ந்த முள் புதர்களும்,மரங்களும் வளர்ந்து விஷ பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறி உள்ளது. குளத்தை சுற்றி திரியும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் குடியிருப்புகளுக்குள் சென்று விடுவதாகவும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது மட்டுமல்லாது இப்பகுதியில் உள்ள மீன், இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் இறைச்சி மீன்,கழிவுகளை கொண்டு வந்து இந்த குளத்தில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் பல்வேறு தொற்று நோய்களும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெரிய குளத்தில் உள்ள நீரை கொண்டு சமையல் செய்வதற்கும், குடிப்பதற்கு பயன்படுத்தி வந்ததாகவும், நாளடைவில் இந்த குளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி குளம் மிகவும் குறுகிய அளவே காணப்படுவதாகவும், இதனை மீட்டு குளத்தை சீர் செய்ய பலமுறை கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் மனு அளித்தும், வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இனியாவது இந்தப் பெரிய குளத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்கும் விதமாக குளத்தில் வளர்ந்துள்ள அடர்ந்த முள் புதர்களை அகற்றிவிட்டு ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை மீட்டு கரையை பலப்படுத்தி பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products