சிப்காட் கழிவு பொருட்களை எரிப்பதால் மக்கள் அச்சம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுலபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது காயலார்மேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள் என்பதால் குடிசை வீடுகள் மிகுந்த பகுதியில் இந்த இப்பகுதியும் ஒன்று. இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டையிலிருந்து கொண்டு வரப்படும் கழிவு பொருட்களை கொட்டி எரித்து வருகின்றனர். இந்த எரியூட்டப்பட்ட கழிவிலிருந்து கிடைக்கும் இரும்பைக் கொண்டு லாபம் ஈட்டுவதற்காக குடியிருப்பு பகுதியில் 10 நாட்களாக இரவு பகலாக எரியும் தீயால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதுடன், குடிசை வீடுகள் எரியும் அபாயமும் உள்ளது.
மேலும் கண் எரிச்சல், உடல் அரிப்பு, அடுக்குத் தும்மல், மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு நோய்கள் மட்டுமின்றி டி.பி, ஆஸ்துமா போன்ற பெரும் வியாதிகளும் பரவ வாய்ப்பு உள்ளதாக கிராம மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால் இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தீயை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கவும் தவறும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu