பழுதான நிலையில் காட்சியளிக்கும் பாலவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்..

பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கும் பாலவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம்.
Panchayat Office -தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழுதான நிலையில் காணப்படும் கட்டிடங்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக, அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள் ஆங்காங்கே சேதமடைந்த நிலையிலேயே காட்சியளிக்கின்றன.
எதிர்பாராத விபத்துகளை தவிர்க்கும் வகையில், பழுதான நிலையில் காணப்படும் கட்டிடங்களை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, நீண்ட நாள்களாக பயன்படுத்தாமல் உள்ள கட்டிடங்களை முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்க முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பழுதான நிலையில் காணப்படும் அரசு கட்டடங்களில் ஒன்றாக திகழ்கிறது திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்கோட்டை அரேகே உள்ள பாலவாக்கம் ஊராட்சி மன்ற கட்டிடம். இந்த ஊராட்சியில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இங்கு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, சொத்து வரி மற்றும் தாங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூற ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்வது உண்டு.
ஆனால், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பூச்சுகள் தூர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்தபடி மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், அந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் ஜே.ஜே. நகர் பகுதியில் அமைந்துள்ள இ-சேவை மைய கட்டிடத்தில தற்போது ஊராட்சி மன்ற நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. பாலவாக்கம் ஊராட்சி பகுதி மக்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை சொல்லவும், வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை செலுத்தவும் நீண்ட தூரம் பயணிக்கும் நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியது:
ஜெ.ஜெ. நகர் பகுதியில் உள்ள இ-சேவை கட்டிடத்தில் இயங்குவதால் அவ்வளவு தூரம் செல்ல தங்களால் முடியவில்லை. எனவே, பஜார் பகுதியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஊராட்சி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜெ.ஜெ. நகர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இ-சேவை மையமும், பாலவாக்கம் ஊராட்சி மன்ற நிர்வாக அலுவலகமும் செயல்பட்டு வருவதால் சில நேரங்களில் ஊராட்சி நிர்வாகம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊராட்சியில் உள்ள முக்கிய கோப்புகளை சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே, சேதமடைந்த நிலையில் காணப்படும் பாலவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu