சமுதாயக் கூடத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தால் பொதுமக்கள் பாதிப்பு
Farmers Latest News -பெரியபாளையம் அருகே சூளைமேனி கிராமத்தில் சமுதாய கூடத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தால் சுப நிகழ்ச்சிகள் நடத்த இயலாமல் ஏழை மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே சூளைமேனி ஊராட்சியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம்,நிச்சயதார்த்தம், காதணி விழா,மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளை பெரியபாளையம், ஊத்துக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள திருமண மண்டபங்களில் நடத்துவதால்,அதிக அளவில் வாடகை தொகை செலுத்த வேண்டி இருந்தது. எனவே,சூளைமேனி பகுதியில் மேற்கண்ட நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் நடத்த சமுதாய கூடம் ஒன்று கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன்படி,கடந்த 2013-ம் ஆண்டு சமுதாய கூடம் ஒன்று கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பயன் பெற்றனர்.
இந்த நிலையில்,ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மட்டும் பயன் பெறும் வகையில் இந்த சமுதாய கூடத்தில் தற்போது தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. மேலும்,இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதிகளான பாலவாக்கம்,லட்சிவாக்கம், கீழ்கரமனூர் கண்டிகை, தண்டலம்,ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் சூளைமேனியில் சமுதாய கூடத்தில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து, தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்கிறார்கள்.இதனால் சூளைமேனி ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் வீட்டின் சுப நிகழ்ச்சிகளான காதுகுத்து,வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்த சமுதாய கூடமின்றி அவதிப்படுகின்றனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்,ஊராட்சி மன்ற நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் புகார் கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற செயலாக உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகமும்,தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து சமுதாய கூடத்தில் ஏழை எளிய மக்கள் குறைந்த வாடகையில் தங்களது சுப நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேலும், சூளைமேனி பகுதியில் புதியதாக நெல் கொள்முதல் நிலையம் ஒன்று கட்ட வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தாலும் ஏற்கனவே பொதுமக்கள் பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்த சமுதாய கூடத்தை நெல் கொள்முதல் நிலையமாக மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் விவசாயிகளுக்கு என்று தனியாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகளுக்கு அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu