பூட்டி கிடக்கும் பள்ளி கட்டிடத்தில் திறக்க கோரிக்கை
பூட்டியே கிடக்கும் பள்ளிக் கட்டடம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெத்திக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட சாமி ரெட்டி கண்டிகையில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 436 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு பெத்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் வந்து செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளதாலும், மாணவர்களுக்கு போதிய கட்டிட வசதி இல்லாததாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசால் பெத்திக்குப்பத்தில் காலனி துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட பள்ளி, கட்டிட வசதி இல்லாத காரணத்தினால் இ சேவை மையத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. தாங்கள் பகுதியில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டில் ரூ.15 லட்சத்தை 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
இயற்கையோடு பின்னிப்பிணைந்துள்ள இப்பள்ளி கட்டிடம் கடந்த இரண்டு வருடங்களாகவே திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கும்மிடிப்பூண்டியில் பல இடங்களில் தனியார் கட்டிடங்களிலும், பாழடைந்த கட்டிடங்களிலும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி திறக்கப்படாமல் பூட்டி கிடப்பதில் மர்மம் நீடிப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பள்ளி கட்டிடம் பூட்டி கிடப்பதால் மேலும் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 50 சென்ட் நிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்குமா?.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu