போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
ஊத்துக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தாலுகா அலுவலகம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.
இந்நிலையில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாரதி வேலூர் மாவட்டத்திற்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இந்நிலையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஊத்துக்கோட்டைக்கு நியமிக்கப்பட்டார்.
கடந்த வாரம் இவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து வழக்கறிஞர்களுக்கும் இவருக்கும் பல்வேறு சம்பவங்களில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கோர்ட்டுக்கு காரில் வரும் வழக்கறிஞர்கள் காரை நிறுத்தக்கூடிய இடம் பிரச்சனை, புகார் தாரர்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது வழக்கறிஞர்களுடன் வரக்கூடாது, புகார் மனுக்களை பொது மக்களுக்கு வழக்கறிஞர்கள் எழுதிக் கொடுத்தாள் அவர்களை ஒருமையில் பேசுவது உள்ளிட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் அடுத்தடுத்து ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
இந்நிலையில், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அவரை சந்தித்து பேச சென்றபோது அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தாராம். மேலும், ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் ஒருவர் தனது வீட்டு விசேஷத்திற்கு பழங்களை காரில் ஏற்றுக் கொண்டிருந்தாராம். அவ்வழியே வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தக் காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வருமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் வழக்கறிஞருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து வழக்கறிஞர்களிடம் முரண்பாடாக நடந்து கொள்ளும் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரை கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்றும், இன்றும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இவர் தொடர்ந்து வழக்கறிஞர்களை அவமதித்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்கள் கூறினர். இப்போராட்டத்தால் ஊத்துக்கோட்டை சப்-டிவிஷனில் உள்ள பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பெண்ணாலூர்பேட்டை காவல் நிலையங்களின் வழக்குகளும், வாய்தாவுக்கு வந்த வழக்குகளும் விசாரணை செய்ய முடியாமல் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu