கும்மிடிப்பூண்டி அருகே கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிலம்பம் போட்டி
கும்மிடிப்பூண்டி அருகே கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி சிலம்ப போட்டி நடைபெற்றது.
சிலம்ப பயிற்சியாளர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் நலவாரியம் அமைத்து தந்தார் என்று பெருவாயலில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் பேராசிரியர் காளீஸ்வரன் பெருமிதத்துடன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி பெருவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் மற்றும் மூத்த சிலம்ப ஆசான்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியர் காளீஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிலம்ப ஆசான்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் அவர் பேசுகையில் ‘நாட்டுப்புற கலைஞர்கள், மற்றும் சிலம்பாட்ட பயிற்சியாளர்களுக்கு கருணாநிதி 2008ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது நலவாரியம் அமைத்து தந்தார். அதன் காரணமாக தமிழகத்தில் பழம்பெருமை மிக்க வீர விளையாட்டான சிலம்பக்கலைக்கு உயிர் கிடைத்து உள்ளது. ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த சிலம்பம் இன்று நகர்ப்புறம் வரை பரவி சர்வதேச போட்டிகளிலும் பங்கு பெறுகிறது என்றால் அதற்கு காரணம் கருணாநிதி அமைத்த நல வாரியம்தான். சிலம்பம் விளையாட்டின் பூர்வீகம் தமிழ்நாடு தான்.எனவே நாம் அந்த கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும்’ என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பத்து வயதுக்குட்பட்டோருக்கான சிலம்ப போட்டிகளை அவர் துவக்கி வைத்தார்.இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 25 அணிகளை சேர்ந்த சுமார் 600.க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடியதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த விழாவில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ஹரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu