கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா
கும்மிடிப்பூண்டி அருகே அரசுப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இன்று மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா பள்ளி தலைமை ஆசிரியை ரூத் சம்பூரணம் இசபெல்லா தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் தினம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கி கூறினர்.
காலை பிரார்த்தனை நேரத்தில் மாணவர்கள் சீருடையில் அணிவகுத்து நின்றனர். தமிழ்தாய் வாழ்த்து பாடலை மாற்றுத்திறனாளி மாணவர்களைப்போல சைகை மொழியில் பாடி மாணவிகள் அசத்தினர். இதனை தொடர்ந்து ஒன்று, இரண்டு என்பதையும் வணக்கம், நல்வரவு, நன்றி என்பதையும் மாணவிகள் சைகை மொழியில் செய்து காட்டினர்.
அதேபோல் வாரத்தின் ஏழு நாட்களை மாணவிகள் சைகை மொழியில் செய்து அனைவரையும் அசத்தினர். நிகழ்ச்சியின் முன்னதாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu