பயிருக்கு காப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

பயிருக்கு காப்பீடு  வழங்க கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
X

பயிர் காப்பீடு வழங்கக்கோரி ஊர்வலம் சென்ற விவசாயிகள்

பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க கோரி ஊத்துக்கோட்டையில் விவசாயிகள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாறிவரும் பருவநிலை காரணமாக விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த பயிர்களுக்கு உரிய மகசூல் பெற முடிவதில்லை. தேவைப்படும் நேரத்தில் மழை பெய்யாமல், அறுவடை சமயத்தில் மழை பெய்து பயிர்களை சேதப்படுத்தும். இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க அவர்கள் பயிர் காப்பீடு செய்கின்றனர். ஆனால், ஒரு சில காரணங்களால் காப்பீட்டுத் தொகை வருவதற்கு தாமதமாவதால், அவர்கள் இழப்பை ஈடு செய்ய முடியாமல், போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்கோட்டை வட்ட குழு சார்பில் 2021-ம் ஆண்டு பாரி போகம் பயிர்களுக்கு காப்பீடு இழப்பு தொகை வழங்க கோரி ஊத்துக்கோட்டையில் கண்டன ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருந்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு, வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துளசி நாராயணன், மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்டத் துணைச் செயலாளர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, வழக்கறிஞர் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன உரையாற்றினர்.

பின்னர், வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவனிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை வாங்கிய உதவி இயக்குனர் விவசாயிகளிடம் சமரச பேச்சு வார்த்தை மேற்கொண்டார். மேலும், தமிழக அரசு ரூ.481 கோடி நிதி ஒதுக்கி உள்ளதால் விரைவில் இழப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை ஏற்று விவசாயிகள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ஒரு ஏக்கருக்கு சுமார் 30,000 செலவாகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணத்தினால் ஒரு ஏக்கருக்கு 10 மூட்டை நெல் மட்டும் மகசூல் வருவதாகவும், இந்த நஷ்டத்தை ஈடுகட்ட காப்பீட்டுத் தொகை ஓரளவிற்கு உதவும் என்று நினைத்தோம் ஆனால் காப்பீட்டு தொகை பணம் வழங்கப்படவில்லை. இவ்வாறு இழப்பீடு தொகை வழங்க தாமதம் செய்தால், நாங்கள் விவசாயம் எப்படி செய்வது? எனவே இது குறித்து அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும். இல்லை என்றால் பெரிய அளவில் விவசாயிகளை திரட்டி சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!