கும்மிடிப்பூண்டி அருகே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி அருகே  குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
X

தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கும்மிடிப்பூண்டி அருகே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்ற உத்தரவிட்டது.

இதனையடுத்து பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல் துறையினரின் உதவியுடன் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கால அவகாசம் வழங்காமல் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதே பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென குப்பன் என்ற விவசாய கூலி தொழிலாளி தமது வீட்டிற்குள் சென்று கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற போது சுதாரித்துக்கொண்ட காவல் துறையினர் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றினர்.இதனை கண்ட அவரது மனைவி மல்லிகா மற்றும் அவரது மைத்துனி ஆகிய இருவரும் காவல் துறையினரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தங்களது உடலிலும் இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்களின் பிடியிலிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி காவல் துறையினர் மதில் சுவர் வழியாக வெளியில் வீசினர்.பின்னர் மூவரின் உடலிலும் தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர். இதன்காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி