கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தையொட்டி ரயில்வே இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் மறு சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் மறு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளான நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, மல்டி லெவல் பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா, வை ஃபை வசதி போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தையொட்டி உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக ரயில்வே நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் வழங்கியிருந்தது. ரயில் நிலையம் மறுசீரமைக்கப்பட்டு வரும் நிலையில் ரயில்வே இடத்தில் இருந்த 225 ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஆறு மாதங்களாகவே பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 200க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள், தேவாலயம், கோவில் என ஒட்டுமொத்தமாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே வீடுகளில் வைத்திருந்த பொருட்களை கூட எடுக்க விடாமலும், சிமெண்ட் ஓடுகளை கூட கழட்ட விடாமலும் காலையில் வந்து இயந்திரங்களைக் கொண்டு வீடுகளை இடித்து விட்டதால் நிற்கதியாக தெருவில் நிற்பதாகவும், குழந்தைகளை வைத்து கொண்டு தங்குவதற்கு எங்கே செல்வது என பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கூலி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாகவும், ஆயிரக்கணக்கில் வாடகை கொடுத்து எப்படி வசிப்பது எனவும், அரசு தங்களுக்கு மாற்று இடம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu