ராட்சத எந்திரம் ஏற்றிச் சென்ற லாரி மீது அறுந்து விழுந்த மின் கம்பிகள்: போக்குவரத்து பாதிப்பு

ராட்சத எந்திரம் ஏற்றிச் சென்ற லாரி மீது அறுந்து விழுந்த மின் கம்பிகள்: போக்குவரத்து பாதிப்பு
X
கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் ஏற்றிச் சென்ற எந்திரம் மின்கம்பியில் சிக்கி மின் மாற்றியுடன் மின்கம்பிகள் அருந்து லாரி மீது விழுந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சென்னையில் இருந்து டிரைலர் லாரியில் கனரக ராட்சச எந்திரம் ஒன்றை ஏற்றி கொண்டு ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை உத்தரப்பிரதேச மாநிலத்தை சார்ந்த ஓட்டுநர் சோனு மிஸ்ரா என்பவர் ஓட்டி வந்தார்.

லாரி கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலம் சத்திய வேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பொம்மாஜி குளம் என்ற பகுதியில் லாரி சென்றபோது லாரியில் ஏற்றப்பட்டிருந்த உயரமான ராட்சத எந்திரம் சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பிகளில் சிக்கி அந்த மின்கம்பிகளுடன் இணைக்கப்பட்ட மின் மாற்றியுடன் அதனைத் தாங்கிப் பிடிக்கும் கம்பங்களுடன் லாரியின் மீது சாய்ந்தது.

அப்போது மின் கம்பிகள் ஒன்றுக்கு ஒன்று பின்னி உரசல் ஏற்பட்டதால். அதிலிருந்து மின் பொறிகள் கொட்டியவாறு மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். இந்த விபத்தால் சாலை நடுவிலே லாரி நின்றதால் லாரியை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் கவரப்பேட்டை- சத்திய வேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணத்தினால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story