18 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் அருகே தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் 55-ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் என 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இதில் தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு மற்றும் 31- விழுக்காடு அகவிலைப்படியும் சேர்த்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு பல ஊராட்சிகளில் நான்கு மாதங்கள் வரை ஊதிய பாக்கி நிலுவையில் உள்ளது, இதனை உடனே வழங்க வேண்டும், பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளத்தை வழங்க உத்தரவிட வேண்டும், அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 18 மாதங்கள் ஊதியம் பாக்கி உள்ளதை உடனே வழங்க வேண்டும், ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், மற்றும் பணி பதிவேடு சரி செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எல்லாபுரம் பி.டிஓ. அலுவலகம் முன்பு தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் மாநிலத் தலைவர் ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய தலைவர் பழனி, செயலாளர் ஸ்டாலின், மாநிலக்கழு உறுப்பினர் குமரவேலு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சம்பத், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன், கவுன்சிலர் பி.ரவி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.பத்மா உட்பட பல கண்டன உரையாற்றினார்.
சம்பள பாக்கியை உடனடியாக ஒரே கட்டமாக வழங்கப்படும், பூச்சி அத்திப்பேடு போன்ற பெரிய ஊராட்சிகளில் குப்பைகளை எடுத்துச் செல்ல வாகனங்கள் இல்லாததால், குப்பைகளை தலையில் சுமக்கும் அவல நிலை உள்ளது. இதனை போக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu