வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்: புதிய கட்டடம் கட்டித்தர கோரிக்கை
சேதமடைந்துள்ள அங்கன்வாடி மையம்
அங்கன்வாடி என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் இம்மையங்கள் பொதுவாக பால்வாடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, அரம்ப கால கல்வி கற்பதற்கான சூழல், குழந்தைகள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வளர்வதற்கு தேவையான பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த பெரிய வண்ணங்குப்பம் கிராமத்தில் சுமார் 3.000 க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் ஓடு போட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 35 கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் பயின்று வந்த நிலையில் தற்போது கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கு விரிசல் ஏற்பட்டும் சிமெண்ட் ஓடுகள் ஆங்காங்கு உடைந்த நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக அங்கன்வாடி மையம் மூடப்பட்டு அருகாமையில் உள்ள வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது
ஆனால், தற்போது அமைந்துள்ள அங்கன்வாடி மையம் சிறிது தொலைவில் உள்ளதால் அங்கு சென்று குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அங்கன்வாடி மையத்தில் சேதமடைந்த பழைய சிமெண்ட் ஓடு கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது
தற்சமயம் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் அதிக தூரம் செல்ல வேண்டியிருப்பதால், தற்போதாவது இந்த பழைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu