சேதமடைந்த ஏரி கரையினை முழுமையாக பலப்படுத்த கோரிக்கை
மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள சேதமடைந்த ஏரி.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வாய் ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 100ஏக்கர் பரப்பளவில் சித்தேரி அமைந்துள்ளது. இந்த ஏரி அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக முழுமையாக நிரம்பி கடல் போல காட்சி அளிக்கிறது.
இந்த சித்தேரியின் கரை கடந்த சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்ட போது பணிகள் சரிவர செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கரை சேதமடைந்து தண்ணீர் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏரியின் கரை உடைந்தால் தண்ணீர் வீணாவதுடன் அருகில் உள்ள வீடுகள் மற்றும் நெற்பயிர்களை தண்ணீர் புகுந்து பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் புகாரை தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியின் கரையில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி கரையை தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். எனினும் பலத்த மழை பெய்தால் ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சுறுத்தல் உள்ளனர். கரையை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் போது பெயரளவிற்கு இல்லாமல் முறையாக பலப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பிரச்சனையை நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்காலிகமாக தான் பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் செய்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி உடனடியாக நிரந்தர தீர்வை காண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu