கும்மிடிப்பூண்டியில் ஐ.ஓ.பி.வங்கியினை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

கும்மிடிப்பூண்டியில் ஐ.ஓ.பி.வங்கியினை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்
X

கும்மிடிப்பூண்டி ஐ.ஓ.பி. வங்கி முன் வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டியில் ஐ.ஓ.பி.வங்கியினை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தினந்தோறும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி, விவசாயம், திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் நகைக்கடன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் வட்டி செலுத்தப்பட்ட நபர்களுக்கு நகை ஏலம் என நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று முறையிட்டுள்ளனர்.

அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் நகைக்கடன் கணக்கில் வட்டி செலுத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதே போல சிலரது பெயரில் பெறப்பட்ட நகைக்கடன் தொகையை விட அதிக கணக்கில் நகைக்கடன் பெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர் வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தினர். பிரச்சினைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து நகை கடன்களில் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்திலும் வாடிக்கையாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story