மின்கசிவு காரணமாக குடிசை எரிந்து சேதம்: எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கல்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சி பழங்குடியின குடியிருப்பு பகுதியில் மின் கசிவு காரணமாக முனியம்மாள்(32) என்பவரின் குடிசை வீடு தீயில் நாசமான நிலையில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரண உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு் ஊராட்சியில் 18 பழங்குடியினர் குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த முனியம்மாள் வியாழக்கிழமை இரவு அவரது இரண்டு மகள்களுடன் உணவு அருந்தி கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் மளமளவென தீப்பற்றியது. உடனே வீட்டில் இருந்த முனியம்மாவும் அவரது குடும்பத்தாரும் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர்.
சம்பவம் குறித்து அறிந்த ரெட்டம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சங்கர், ஊராட்சி செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததும் சம்பவ இடம் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் நாசமானது. இந்த தீவிபத்தில் குடிசை வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம், சாதி சான்றிதழ், ஆதார்அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்கள் எரிந்து சேதமானது.
தொடர்ந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் முனியம்மாளுக்கு 5000 ஆயிரம் ரூபாய் பணம், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சம்பவ இடம் விரைந்து தீயினால் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு, முனியம்மாளுக்கு ஆறுதல் கூறி, அவரது குடும்பத்தாருக்கு வீட்டு மனை பட்டா நகலை வழங்கியதோடு, பாய், தலையணை, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கி, முனியம்மாளுக்கு அரசின் தொகுப்பு வீட்டை ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தீயில் நாசமான முனியம்மாள் குடும்பத்தினரின் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை சாதி சான்றிதழ் உள்ளிட்டவைகளை தர நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.அப்போது அவரிடம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் அனைத்து ஆவணங்களையும் 1 வாரத்தில் அவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் கௌரி ஹரிதாஸ், ஊராட்சி தலைவர் எல்லம்மாள் சங்கர், ஊராட்சி செயலாளர் குருமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தி உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu