குண்டும் குழியுமான பெரியபாளையம் அம்பேத்கர் நகர் சாலையால் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

குண்டும் குழியுமான பெரியபாளையம் அம்பேத்கர் நகர் சாலையால் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்
X
குண்டும் குழியுமான சாலை.
Road Damage -பெரியபாளையம் அம்பேத்கர் நகர் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்குகிறார்கள்.

Road Damage - திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் குறிப்பாக பெரியபாளையம் ஊராட்சி அம்பேத்கார் நகர் பகுதியில் 650 குடும்பங்களை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.அம்பேத்கார் நகர் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. கார், வேன் போன்ற வாகனங்கள், மாட்டுவண்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வந்ததால் இந்த சாலை தற்போது பழுதடைந்து சாலை போடும் போது பயன்படுத்திய ஜல்லி கற்கள் எல்லாம் பெயர்ந்து வெளியே வந்து விட்டன.

இதனால் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலை வழியாக தான் அந்த பகுதி மக்கள் கடைவீதிக்கு சென்று வருகிறார்கள். மேலும் கல்லூரி, பள்ளிகளுக்கு மாணவர்கள் இந்த சாலையைதான் பயன்படுத்துகிறார்கள். விவசாயிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருவதாலும் பராமரிக்கப்படாமல் இருந்ததாலும் சாலை சேதம் அடைந்து விட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்து மழை காரணமாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த குண்டும் குழியுமான சாலையில்தான் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டிய உள்ளது. அதுவும் இரவு நேரங்களில் அந்த சாலையில் சென்றவர்கள் விபத்துகளில் சிக்கி உள்ளனர். இது மட்டுமல்லாமல் பெரியபாளையம் இப்பகுதியில் உள்ள நோயாளிகள் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல அந்த வழியாகத்தான் செல்லும் அவல நிலை உள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் சிலர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி உள்ளதால் சாலை குறுகி விட்டது. இதானல் இந்த சாலை வழியாக செல்லும் பலர் விபத்தில் சிக்குகிறார்கள்.

இச்சாலையை சீர் செய்து தர பலமுறை அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கிராம சபை கூட்டங்களில் கோரிக்கை வைத்தும். சம்பந்தப்பட்ட எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும். மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. சாலையை ஆக்கிரமித்து கட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றி விட்டு குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீர் செய்வதோடு புதிய சாலையை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை ஏற்று சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் காத்து இருக்கிறார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story