ஆம்னி பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2 கோடி பறிமுதல்
தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் இருந்து சென்னை மாதவரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எனப்படும் தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது பேருந்தில் பிரத்தியேக அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஹைதராபாத்தில் இருந்து ராஜஸ்தானை சேர்ந்த பக்தாராம் என்பவர் பணம் இருந்த அட்டைப்பெட்டியை பேருந்தில் ஏற்றி அனுப்பியதாகவும், அட்டைப்பெட்டியின் மேல் முகவரி எழுதப்பட்ட நபரிடம் சென்னை மாதவரத்தில் சேர்க்கும் படியும் கூறியதாக ஆம்னி பேருந்து ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ஓட்டுனரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அட்டைப்பெட்டியில் இருந்த நபரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசி, பேருந்து பழுது காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து மாற்றுப் பேருந்தில் பொருட்கள் ஏற்றப்பட உள்ளதாகவும், உடனே பேருந்தில் உள்ள அட்டைப்பெட்டியை கும்மிடிப்பூண்டி வந்து வாங்கி கொள்ளுமாறும் ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.
பேருந்து கும்மிடிப்பூண்டி வந்தவுடன் பார்சலை வாங்குவதற்காக வந்த சூரஜ்பூரி என்பவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் சென்னையில் வீட்டுமனை வாங்குவதற்காக பணம் கொண்டுவரப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டுவரப்பட்டதால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu