ஆரணி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த இளைஞர் உயிரிழப்பு

ஆரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை கைப்பற்றி ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்பாபு. விவசாய கூலித் தொழிலாளி (26). நேற்றிரவு திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கன மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இந்நிலையில் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளிக்கு மோகன் பாபு சென்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே மோகன்பாபு மயங்கிய நிலையில் இருப்பதாக நினைத்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில இந்த கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக போடப்பட்ட மின் கம்பிகள் பல பகுதிகளிலும் ஒட்டு போட்டது போல் காணப்படுவதாகவும், இதுபோன்ற வயர்கள் வயல் பகுதிகளிலும் கிராமத்திலும் உள்ளதாகவும். இந்த வயர்களை மாற்ற பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும். இது மட்டுமல்லாமல் பல இடங்களில் பழுதடைந்து சிமெண்ட் கான்கிரீட்டுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த படி மின்கம்பங்கள் உள்ளதாகவும் இவைகளை மாற்ற பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணத்தினால் மழை காற்று வரும்போது எல்லாம் மின்கம்பிகள் அறுந்து விழுந்து கிடப்பது தெரியாமல் ஆடு, மாடுகள் மின் வயர்களை மிதித்து உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.
எனவே இது போன்ற உயிரிழப்புகள் மேலும் நிகழாமல் இருக்க அதிகாரிகள் ஒட்டு போட்ட நிலையில் உள்ள மின் கம்பிகளையும், சேதமடைந்த மின் கம்பங்களையும் மாற்றி அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu