'எங்கள் தொடர்பில் 10 தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள்'- எடப்பாடி பழனிசாமி பேட்டி
எடப்பாடி பழனிசாமி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தில் கட்சி நிர்வாகி வீட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்
மூன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுடன் இணைய பேசிக் கொண்டிருப்பதாக கேட்கிறார்கள். ஆனால் 10 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தான் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக நடை பயணம் செல்கிறார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேயரையும், துணை மேயரையும் பின் வரிசையில் அமர வைத்தது தான் திராவிட மாடல் ஆட்சி. தி.மு.க. என்பது கார்ப்பரேட் கட்சி, குடும்ப கட்சி. வெறும் எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அனைத்து திட்டங்களை தொடங்கி வைத்து முன்னிலைப்படுத்துகிறார். மேயருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை.
புதிய மின் மசோதா குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்க பட்ட பிறகே விவசாயிகளுக்கு பாதிப்பா என்பது குறித்த கருத்தை தெரிவிக்க முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அறிவிப்பு வந்தால் அதன் பிறகு வெற்றி வாய்ப்பு குறித்து தெரிவிப்பேன் என்றார்.
மேலும் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை வரவேற்பதாக தெரிவித்த நிலையில் உங்களது நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு அ.தி.மு.க. என்பது தொண்டர்களால் ஆளப்படும் கட்சி தொண்டர்கள் தான் ஆட்சி செய்து வருவதாகவும் மற்றவர்களுக்கு இடமில்லை என தெரிவித்தார். ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் வழக்கின் விசாரணை முடிவிலேயே அது குறித்து தெரியவரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்பது காலம் தாழ்ந்து தொடங்கப்பட்ட விசாரணை என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சி தலைமையகத்தில் பொருட்கள் திருடு போனதாக புகார் அளித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் இந்த ஆட்சியில் அது நடைபெறாது எனவும், நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu