ஆவடி அருகே ராணுவ வீரரை புடவையால் இறுக்கி கொலை செய்த மனைவி கைது
ஆவடி அருகே ராணுவ வீரரை புடவையால் இறுக்கி கொலை செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர். தினசரி போதையில் தன்னுடன் தகராறில் ஈடுப்படுவதும் தனது குடும்பத்தினரை இழிவாக பேசி வந்ததால் கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (வயது 38), இவருக்கு திருமணம் ஆகி மனைவி லீமா ரோஸ் மேரி ( வயது 36) உள்ளார் வேளாங்கண்ணி தாஸ் இந்திய ராணுவ படையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மே 10-ம்தேதி இரவு, அதீத மது போதையில், படுக்கை அறையில் சுயநினைவின்றி படுத்திருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, லீமா ரோஸ் மேரி, அவரை மீட்டு, ஆவடி ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தார்.மருத்துவ பரிசோதனையில், வேளாங்கண்ணி தாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வேளாங்கண்ணி தாஸ் இறந்த விவகாரத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், வேளாங்கண்ணி தாஸ் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்தது.அதன் அடிப்படையில், போலீசார், அவரது மனைவி லீமா ரோஸ் மேரியை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது என் கணவர் தினமும் மது போதையில் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். என் பெற்றோரையும் அவதூறாக பேசினார். இதனால், ஆத்திரமடைந்த நான் சம்பவ தினத்தன்று, மது போதையில் படுத்திருந்த கணவரை புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என லீமா ரோஸ் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் லீமா ரோஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மது போதையில் நாள்தோறும் மனைவியிடம் தகராறு செய்து வந்த கணவரை புடவையால் கருத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu