குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆவடி அடுத்த பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குப்பை கிடங்கை இட மாற்றம் செய்யக் கோரி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றில் இருந்து தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆவடி அடுத்த சேக்காடு தண்டரை பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்படுகிறது.
இந்நிலையில் இக்குப்பை கிடங்கில் அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் கரும்புகை அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல் இந்தக் காற்றை சுவாசிப்பதால் பல்வேறு தோல் சம்பந்தமான உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக இந்த குப்பை கிடங்கை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றும்படி பலமுறை சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சிக்கு தெரிவித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் ஒன்று திரண்டு தண்டரை - பூந்தமல்லி நெடுஞ்சாலை, அணைக்கட்டுச்சேரி பெட்ரோல் பங்க் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டாபிராம் துணை ஆணையர் பாஸ்கர், உதவி ஆணையர் சதாசிவம் ஆய்வாளர் பிரித்திவிராஜ் மற்றும் திருநின்றவூர் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குப்பை கிடங்கால் பல்வேறு தொற்று நோய்களும் மூச்சு பிரச்சனை உள்ளட்டவை ஏற்படுவதாகவும் இதனை மாற்ற பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் உடனடியாக அப்புறப்படுத்தினால் மட்டும்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று கூறினர். அப்போது இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu