பாதாள சாக்கடை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு
X
ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பாதாள சாக்கடை ஏற்பட்ட அடைப்பை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த ஜே.பி. எஸ்டேட் பகுதி சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை சரி செய்யும் பணியில் ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் நான்கு நபர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பணியில் ஆவடி அருந்ததிபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத் ( வயது 25).பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சரி செய்து கொண்டிருக்கும் பொழுது மூச்சு திணறி மேலே ஏறும்பொழுது அவரால் ஏற முடியாமல் விஷ வாய்வு தாக்கி பாதாள சாக்கடைக்குள் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து ஆவடி தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் மயங்கி விழுந்தவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கோபிநாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்பு அப்பகுதியில் அமரர் ஊர்தி வாகனம் வரவழைத்து பின் உடற்கூறு ஆய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.ஆவடி சுற்றுப்பகுதியில் இதுபோல் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பது வாடிக்கை ஆகிவிட்டதாகவும், எனவே இனிமேல் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாத வகையில் அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது