இறுதி மூச்சுவரை நான் அதிமுகவில் பணியாற்றுவேன் -முன்னாள் அமைச்சர் ம.பாண்டியராஜன்

இறுதி மூச்சுவரை நான் அதிமுகவில் பணியாற்றுவேன் -முன்னாள் அமைச்சர் ம.பாண்டியராஜன்
X
இறுதி மூச்சுவரை நான் அ.தி.மு.க.வில் பணியாற்றுவேன். எந்த நேரத்திலும் எந்த மாற்று சிந்தனை எனக்கு வராது -ம.பாண்டியராஜன்

தீவிர அரசியலில் இருந்து இடைவெளி விடப்போவதாக வந்த தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இறுதி மூச்சுவரை நான் அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே பணியாற்றுவேன். எந்த நேரத்திலும் எந்த மாற்று சிந்தனையும் எனக்கு வராது என்று முன்னாள் அமைச்சர் ம.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட ஆவடி மேற்குப்பகுதி அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆவடி மேற்கு பகுதி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் ம.பாண்டியராஜன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

ஆவடி மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், பட்டாபிராம் டைடல் பார்க், அண்ணனூர் மேம்பால திட்டம், திருமுல்லைவாயில் போலீஸ் குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இவை அனைத்தும் அதிமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்திலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கட்டுப்பாடுகளை விதிப்பதை விட மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கி அவர்களிடமிருந்து தடுப்பூசிகளை பெற்று அனைவருக்குமான தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றினாலே 3வது அலையில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்று அவர் கூறினார். தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து இடைவெளி விடப் போவதாக பேட்டியளித்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், 5ஆண்டுகள் நான் அமைச்சராக இருந்தபோது என்னுடைய சொந்த நிறுவனத்தை கூட கவனிக்க முடியாத நிலை இருந்ததால் தற்போது மீண்டும் அந்த நிறுவனங்கள் என்னை சேர்மனாக பதவியேற்க அழைப்பு விடுக்கின்றன.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக என் உயிர் மூச்சு போன்றது. அம்மாவின் ஆணையின் பேரிலேயே அதிமுகவில் இணைந்தேன். இறுதி மூச்சு வரை எனக்கு அதிமுகதான். கண்டிப்பாக எந்த நேரத்திலும் எந்த மாற்றுச் சிந்தனையும் எனக்கு கிடையாது. ஆனால் தற்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பணியை தான் தற்போது கையில் எடுத்து உள்ளேன். அதே நேரத்தில் கட்சிப் பணியில் எந்த தொய்வும் இல்லாமல் பணியாற்றிக் கொண்டே இருப்பேன். ஆவடி மாநகராட்சியில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்கள பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!