முககவசம் அணியாததற்கு அபராதம் தர மறுத்த கடை உரிமையாளர் மீது தாக்குதல்
5000 ரூபாய் அபராதம் எதற்கு என்று கேள்வி கேட்ட வணிகர் பாதுகாப்பு பேரவை செயலாளர் மூக்கை அடித்து உடைத்த, சுகாதார ஆய்வாளருடன் வந்த உதவியாளர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு.
சென்னை மாநகராட்சி மண்டலம் 7 அம்பத்தூரை அடுத்துள்ள அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனி பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் மீது வழக்கமாக அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஐ.சி.எப் காலனி பகுதியில் உள்ள திருப்பூர் காட்டன் எனும் தனியார் துணிக்கடை மற்றும் அரிசி கடையில் மாஸ்க்முகக்கவசம் போடவில்லை என்று இரண்டு கடைகளுக்கும் தலா 5000 அபராதம் விதித்துள்ளனர்.
அப்போது அரிசி கடை நடத்தி வரும் தமிழக வணிகர் பாதுகாப்பு பேரவையின் அம்பத்தூர் தொகுதி செயலாளர் லட்சுமணன் பணத்தை குறைத்து போடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் நாங்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு அபராதம் போட வேண்டும் எங்களுக்கு இலக்கு உள்ளது என்று கறாராக கூறியுள்ளனர்.
இதில் மாநகராட்சி ஊழியருக்கும், கடை உரிமையாளருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பாரதிராஜா, மற்றும் உடன் வந்த உதவியாளர்கள் கடைக்குள் நுழைந்து அரிசி கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கி அவரது மூக்கை அடித்து உடைத்துள்ளனர்.
இவை அனைத்துமே அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த சக கடை உரிமையாளர்கள் லட்சுமணனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சென்னை மாநகராட்சியில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றால் மாநகராட்சி ஆணையர் மண்டல வாரியாக நாள் தோறும் அபராதம் விதிக்க தொகையை நிர்ணயம் செய்வதால் அதிகாரிகள் வியாபாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்வது கைகலப்பாக மாறி ஒருவர் மூக்கு உடைந்து சிகிச்சை பெற்று வருவது அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அம்பத்தூர் மண்டலம் 7ல் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் பணியிடத்தில் முகக்கவசம் அணியாமல் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் விதிமுறைகளை பின்பற்றுங்கள் என்று கொள்ளை அடிப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu