ஆவடி அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X
தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆவடி அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி அருகே தேர்வில் தோல்வியடைந்த மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பருத்திப்பட்டு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு மனைவி புவனேஸ்வரி, மகன் ஜீவன் ஆனந்த்(17) மற்றும் மகள் காவியா உள்ளனர். ரமேஷ் மகன் ஜீவன் ஆனந்த் பூந்தமல்லி அருகே உள்ள நசரத் பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜீவன் ஆனந்த் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான ஜீவன் ஆனந்த் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை பள்ளி முடிந்து ஜீவன் ஆனந்தின் தங்கை காவியா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து காவியா ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ஜீவன் ஆனந்த் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுபற்றி காவியா தனது தாய் தந்தைக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த ஆவடி போலீசார் ஜீவன் ஆனந்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!